அன்னையர் தினம் சில நாட்களில் வருகிறது. பொதுவாக அவர்களுக்கு பூங்கொத்துகள், உடை, ஆபரணங்கள் போன்றவை பரிசாக வழங்கப்படுகின்றது. நமது வாழ்க்கையில் அவர்களது பங்களிப்பு மிக பெரியது. அன்னையரின் அன்பு எல்லை இல்லாதது. அவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை குறிப்பாக தனது வேலை போன்றவற்றை குழந்தைகளை வளர்க்க தியாகம் செய்கிறார்கள். தாயிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவது குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது.
பெரும்பாலான அம்மாக்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினமும் குடும்பத்திற்காக சமைக்கிறார்கள், சலவை, வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றைச் செய்கிறார்கள், அவர்களுடைய வீட்டு வேலைகள் முடிவற்றவை. அவர்களில் பலருக்கு வாராந்திர விடுமுறை இல்லை. எல்லா நாட்களும் வேலை நாட்களே. பண்டிகையின் போதும் அவர்களுக்கு ஓய்வு என்பது இல்லை. விஷேச உணவுகள் பலவற்றை அவர்கள் சமைக்க வேண்டும். உத்யோகத்தில் உள்ள அன்னையர் தங்கள் பணி நேரம் போக மற்ற நேரங்களில் சமையல் மற்றும் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும்.
நிச்சயமாக அவர்களுக்கு பரிசுகளை வழங்குவது மகிழ்ச்சியைத் தரும். ஆனால் முடிந்தால் குறைந்தபட்சம் அன்னையர் தினத்திலாவது அவர்களுக்கு சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகளில் உதவுங்கள். சிறிது ஓய்வு கிடைத்தால் அவர்களுக்கான அன்னையர் தினம் மகிழ்ச்சியாக அமையும்.
அம்மாவை அழைத்து சென்று ஹோட்டலில் முடிந்தால் சாப்பிடலாம். இப்போதெல்லாம் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம், இது சமையலறையில் நீண்ட நேரம் அவர்கள் செலவழிப்பதை குறைக்கும், அதற்கு பதிலாக குடும்பத்துடன் உற்சாகமாக நேரத்தை செலவிட முடியும். குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் வீட்டு வேலையைப் பகிர்ந்து செய்வது ஒரு நல்ல வழி, அது அவர்களுக்கு மிகவும் தேவை. வளர்ந்த குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து சமைக்கலாம் அல்லது சில உதவிகளைச் செய்யலாம். பல பொருட்களை பரிசாக தருவதை விட இது சிறந்தது. குடும்ப பிணைப்புக்கு இது மிகவும் உதவும். அனுசரனை மற்றும் அக்கறையே மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்குகிறது. இந்த சிறப்பு நாளில் அன்றாட பணிகளிலிருந்து அவர்களுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.
நிச்சயமாக சமைக்க மற்றும் பிற வீட்டு வேலைகளில் உதவுவது சிலருக்கு கடினமாக இருக்கும், ஆனால் பல அன்னையர் இந்த வேலையை ஆண்டு முழுவதும் செய்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எனவே அவர்களின் வேலையை புரிந்துகொண்டு அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கான மதிப்பு தரப்பட வேண்டும். அன்னையர் தினம் அன்று மட்டும் அல்லாமல் மற்ற நாட்களிலும் அவ்வப்போது அம்மாவிற்கு உதவுங்கள், நன்றியுடன் இருங்கள்.
ஒரு சுற்றுலா அல்லது குடும்ப பயணமும் சிறந்தது.
இதுவே அவர்கள் விரும்பும் அன்னையர் தின முக்கியமான சிறந்த பரிசு.
தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிருங்கள்
நன்றி.

Comments
Post a Comment